search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள வனபகுதி"

    கேரள வனபகுதியில் மீன் பிடிக்க சென்ற ஆதிவாசி வாலிபர் யானை மிதித்து பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர் கோடு அருகே உள்ள விதுராவை அடுத்த தேப்பாறையில் வனப்பகுதி உள்ளது.

    இங்குள்ள வனப்பகுதியில் ஆதிவாசிகள் குடியிருப்பு உள்ளது. ஏராளமான ஆதிவாசிகளும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தற்போது இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதிக்கு செல்லும் ஆதிவாசிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்திருந்தனர்.

    தேப்பாறையை சேர்ந்த ஆதிவாசி வாலிபரான அனூஷ் (வயது 26) என்பவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் கிராமத்திற்கு திரும்பவில்லை.

    இதனால் கவலை அடைந்த அவரது மனைவி சூர்யா அதுபற்றி உறவினர்களிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் சிலர் அனூசை தேடி வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு உள்ள புதருக்குள் அனூஷ் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

    அவரை யானை மிதித்து கொன்றிருந்தது. இதுபற்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று யானையின் காலடி தடங்களை பார்வையிட்டு அதை உறுதிசெய்தனர். இதன் பிறகு அனூசின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி விதுரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆதிவாசி அனூஷ் பலியான இடத்திற்கு அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அங்கு அதிக அளவில் யானைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அந்த யானைகள் தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி வழியாக அடிக்கடி கடந்து செல்வதாகவும் ஆதிவாசிகள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். எனவே யானைக் கூட்டத்தை அங்கிருந்து விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
    ×